ஈராக்கில் இருந்து அமெரிக்காவின் கடைசிப் படைகளும் முழுமையாக வெளியேறியுள்ளன. 12 ஆண்டுகால ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) எதிர்ப்பு ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த வெளியேற்றத்தை அமெரிக்காவிற்கு கிடைத்த தோல்வியாகவும், தங்களது வரலாற்று வெற்றியாகவும் ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.
கடந்த 2003-ஆம் ஆண்டு சதாம் உசேனின் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்கப் படைகள் முதன்முறையாக ஈராக்கிற்குள் நுழைந்தன. அதைத் தொடர்ந்து 2011-இல் அமெரிக்கப் படைகள் வெளியேறினாலும், 2014-இல் ISIS பயங்கரவாத அமைப்பு ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியதால், ‘ஆபரேஷன் இன்ஹெரண்ட் ரிசால்வ்’ (Operation Inherent Resolve) என்ற பெயரில் அமெரிக்கா மீண்டும் தனது ராணுவத்தை அங்கு களமிறக்கியது.
தற்போது அந்தப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 அன்று எர்பில் (Erbil) விமானப்படை தளத்தில் இருந்த கடைசி அமெரிக்கப் படைகளும், ராணுவ உபகரணங்களும் வெளியேறியதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சாதாரண ராணுவப் பின்வாங்கலாக ஈரான் பார்க்கவில்லை. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), “அமெரிக்கப் படைகள் தாமாக வெளியேறவில்லை; ஈராக் மக்களின் விருப்பத்தாலும், அரசின் தீவிர நடவடிக்கையாலும் அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
‘பெரும் சாத்தான்’ எனக் கருதப்படும் அமெரிக்கா, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இருந்து படிப்படியாக வெளியேறுவதற்கான தொடக்கமே இது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரின் தியாகத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி இது என்றும் ஈரான் வர்ணித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
ஈரானின் இந்தக் கூற்றை மறுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதன் முதன்மை நோக்கமே ISIS அமைப்பை ஒழிப்பதுதான். அந்தப் பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டதால் நமது வீரர்கள் தாய்நாடு திரும்புகின்றனர். இது அமெரிக்கா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமே கிடைத்த வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ISIS அமைப்பு ஈராக்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவ சக்தியாக செயல்படும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையும் தெரிவித்துள்ளது.
ஈராக்கின் எதிர்காலச் சவால்கள்
அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஈராக்கின் முழுப் பாதுகாப்புப் பொறுப்பும் இப்போது அந்நாட்டு அரசின் கைக்குச் சென்றுள்ளது. எனினும், தலைமறைவாக இருக்கும் ISIS அமைப்பின் எஞ்சிய குழுக்கள் மீண்டும் வலுப்பெறுமா? மற்றும் ஈராக்கில் அதிகரித்து வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை அரசு எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறது? என்பதே தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
