ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை: வெளிநாடு செல்லவும் தடை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு காவல்துறை மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில், ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த பிடியாணையைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் கொழும்பு மேல் ந நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மருத்துவ அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அவருக்கான பிணைதாரர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

எனினும், குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் தனக்குத் திருப்தி இல்லை என்று கூறிய நீதிபதி, பிணைதாரர்கள் முன்னிலையாகத் தவறியதையும் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குர்ஆன் குறித்து ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றம்சாட்டி, தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

Related Articles

Latest Articles