அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவரளி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர், ஆடலி மற்றும் தோட்ம் உள்ளிட்ட ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஒரு கிலோ கொழுந்துக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவு வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்ததாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், வெவரளி தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கலந்துரையாடலின் மூலம் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டத்தைத் தொடரவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களிலும் நாளுக்குரிய சம்பளம் அவசியம் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கௌசல்யா










