“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 8 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே, வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார்” என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவையாவது:
“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாகப் போட்டியிடும். தற்போது வெளிநாட்டில் உள்ள சிலரின் பெயர்கள் உட்பட மொத்தம் 8 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.எனவே, கிராமிய மட்டத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியை வலுப்படுத்தத் தயாராக வேண்டும்.
கட்சியை மறுசீரமைத்துக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும்.பிற கட்சிகளின் தோளில் தொங்கி அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு எமது கட்சிக்குக் கிடையாது.
எனினும், ஒரு பொதுவான கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் எதிரணி தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், அது குறித்தும் அன்றைய கள நிலவரத்திற்கு ஏற்ப பரிசீலிக்கலாம்” என்றார்.










