சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த சிறுவர் ஒருவர் , இபோச பஸ்சுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நோட்டன் பிரிட்ஸ், ஹட்டன் பிரதான வீதியில் நோர்ட்டன்பிரிட்ஜ் பிக்போன் பகுதியிலேயே இன்று காலை 7.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்ட்டன்பிரிட்ஜ் பிக்போன் பகுதியைச் சேர்ந்த நோர்ட்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் ஜெயராம் போல்ராஜ் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் நோக்கி பயணித்த இபோச பஸ் உடன், சைக்கள் மோதி, மாணவன் பஸ்ஸின் முன் சக்கர பகுதியில் சிக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த மாணவனை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இணைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வரும் நிலையில்,அச்சிறுவன் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக நோர்ட்டன்பிரிட்ஜ் நகருக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் நோர்ட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
