அடுக்கடுக்காக நோய்களைக் கூறி ஷிரந்திக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்குப் பிணை கோரி, அவரது சட்டத்தரணிகள் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவரைப் பாதிக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

73 வயதான ஷிரந்தி ராஜபக்ச, 2019-ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாக, அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனில் சில்வா, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், 2021-ஆம் ஆண்டில் மூளை ஸ்கான் பரிசோதனை செய்து கொண்டதாகவும், திடீர் தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷிரந்திக்கு, பின்தண்டுவட நோய் மற்றும் நரம்புச் சுருள் நோய் இருப்பதாகவும், அவரது மருத்துவ நிலைமைகள் காரணமாக உதவியின்றி சில செயல்களைச் செய்வது கடினம் என்றும், அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அவரை விளக்கமறியலில் வைப்பது மன அழுத்தம் காரணமாக அவரது உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்கும்போது அவரது மருத்துவ நிலைமைகளை விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டவாளர் வாதிட்டார்.

இருப்பினும், ஷிரந்தி ராஜபக்சவை ஒக்டோபர் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியல் உத்தரவைத் தொடர்ந்து,ஷிரந்தி நவாலோகா மருத்துவமனையில் கண் நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் பரிசோதிக்கப்பட அனுமதி கோரியும் நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிவிண்ணப்பம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட மருத்துவ ஆலோசனைக்காக ஷிரந்தி ராஜபக்சவை இன்று மதியம் 12.30 மணிக்கு நவாலோகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

Latest Articles