சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுப்பு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக ரியாத் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (ஒக்டோபர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், சவூதி அரேபிய அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர வேண்டாம்!

தற்போதைய நிலைமை தொடர்பான காணொளிகள், குறுஞ்செய்திகள், செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பரப்புவதையோ பகிர்வதையோ தவிர்க்குமாறு இலங்கைத் தூதரகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், உத்தியோகபூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் மூலங்களிலிருந்து வெளியாகும் செய்திகளை மாத்திரமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தூதரகச் சேவைகள் வழமைபோன்று தொடர்கின்றன!

இதனிடையே, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகமும் ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகமும் வழமைபோன்று இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக மற்றும் கொன்சியூலர் சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படுவதுடன், தேவைக்கேற்ப மேலதிக பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் புதிய தகவல்களும் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிமுறைகள் ஊடாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள்
இலங்கைத் தூதரகம் –
தொலைபேசி: +966 11 518 9330
அவசர உதவி இலக்கம்: 054 947 7567
மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk
உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.emb-riyadh.gov.lk/en

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் அமைதியாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமையச் செயற்படுமாறும் இலங்கைத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles