சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நோக்கில், தலவாக்கலை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (16.10.2026) ஹோல்புறூக் பௌத்த விகாரையில் நடைபெற்றது.
ஹோல்புறூக், பெல்மோரல் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட, பார்வைக் குறைபாடுடைய 100 சிரேஷ்ட பிரஜைகள் இந்த முகாமுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது, முதியோர்களுக்கான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிந்து, தேவையானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
கிராம உத்தியோகத்தர் ஆர். குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், முதியோர் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான திருமதி மல்லிகா, திருமதி புளோரா, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்தக் கண் பரிசோதனை முகாமில் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட முதியோர்களுக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










