நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மின் அமைப்பு இயக்குநகம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை ஒரு மின்பிறப்பாக்கி செயலிழந்ததால், நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இது 30 வினாடிகளுக்குள் நாட்டின் தேசிய மின் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்தது.
காலை சுமார் 11:43 மணியளவில் இந்த மின்வெட்டு ஏற்பட்டது.
அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு மின்பிறப்பாக்கி தானியங்கித் துண்டிப்பு, பொதுவாக ஒரு முழுமையான மின் அமைப்புச் செயலிழப்பை ஏற்படுத்தக் கூடாது.
மின்வெட்டு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே மின்சாரம் மீண்டும் வழங்கும் பணிகள் தொடங்கியது.
முக்கிய நீர் மின்பிறப்பாக்கிகள் மதியம் 12:11 மணிக்குள் மீண்டும் இணைக்கப்பட்டு, நான்கு பிரிவுகளில் மின் அமைப்பு மீண்டும் இயக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
முக்கிய மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மதியம் 3 மணிக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், அனைத்து மின் கட்டமைப்பு துணை மின் நிலையங்களும் மாலை 5 மணிக்குள் மீண்டும் இணைக்கப்பட்டு, பெரும்பாலான நுகர்வோருக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் பல நாட்களுக்குச் செயல்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மின் கட்டமைப்பிலிருந்து 810 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் திறனை நீக்கும்.
நிலவும் மழைப்பொழிவின் ஆதரவிலும், ஒப்பீட்டளவில் குறைந்த தேவையின் அடிப்படையிலும் உருவாகும் அதிகபட்ச நீர்மின் உற்பத்தி, குறைந்தபட்ச இடையூறுடன் விநியோகத்தைப் பராமரிக்க உதவும் என்று தேசிய மின் அமைப்பு இயக்குநகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், மின்கட்டமைப்புச் சரிவிற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு உள்ளக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தேசிய மின் அமைப்பு இயக்குநகம் தெரிவித்துள்ளது.
………….

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைப்பு
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ள சில தொழில்நுட்பச் சிக்கல்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டபோது, அரசாங்கம் சார்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அதனை விவாதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு வாரத்திலேயேனும் விவாதத்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்தப் பிரேரணையில் சபாநாயவருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, விரைவில் விவாதத்தை நடத்தத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தபோதிலும், எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை ஒரே நாளில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக, பிரதான எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
………..
‘காவன்திஸ்ஸ’வுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது
இலங்கையின் மிக உயரமானதும் மற்றும் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் ஒன்றான காவன்திஸ்ஸ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்காகப் பல வாரங்களாக கால்நடை மருத்துவ சிகிச்சை பெற்று வந்த காவன்திஸ்ஸ, ஒக்டோபர் 16ஆம் திகதி உயிரிழந்தது.
பொலிஸாரின் தகவலின்படி, வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து கல்கமுவ பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின்போது இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மிகவும் பிரபலமான காட்டு யானைகளில் ஒன்றான காவன்திஸ்ஸ, அதன் வலது முன்னங்காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்தைத் தொடர்ந்து கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிரிழந்தது.
கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் யானைக்குச் சிகிச்சையளித்து வந்தனர். அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பல மருத்துவக் குழுக்களும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
காவன்திஸ்ஸவின் மரணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியதுடன், இலங்கையின் காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளும் யானைக்கு எவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான சூழ்நிலைகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காவன்திஸ்ஸவுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில் இந்தக் கைது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
……….

4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் போராட்டம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (19) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்தில் தற்காலிகக் கொட்டகையொன்றை அமைக்க முயற்சித்தபோது, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை குறித்த இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
………..
நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரிப்பு
70 சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 03 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான நிலைமையினால் நாளாந்தம் தங்களது சுற்றுபுறச் சூழலை சுத்தம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், 70 சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.











