இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நாளை மறுதினம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறிய பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை (ஒக்டோபர் 24) டெல் அவிவ் நகரில் உள்ள பணயக்கைதிகள் சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட ஒக்டோபர் கவுன்சில் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது ஏற்பட்ட பாதுகாப்புத் தோல்விகள் குறித்து உண்மைகளை வெளிக்கொணரவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சுயாதீன அரச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
இந்தப் போராட்டத்தில் இஸ்ரேலின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். யஷார் கட்சியின் தலைவர் காடி ஐசென்கோட் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயிர் கோலான் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 27) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கும் ஐசென்கோட் தலைமையிலான எதிரணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எந்த அணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை.
ஒக்டோபர் 7 தாக்குதல் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நெதன்யாகு அரசாங்கம் இதுவரை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்கும் விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
எனினும், அரசியல்வாதிகளால் நியமிக்கப்படும் குழுவொன்றின் விசாரணையை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றால் அரச விசாரணைக் குழுவொன்றை அமைத்து உண்மைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தத் தேர்தல், இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் நிலைமையை மட்டுமன்றி, ஈரான் தொடர்பான அந்நாட்டின் எதிர்கால இராணுவக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
