இஸ்ரேலிய அரபு மக்களுக்கு சலாம்: தேர்தல் தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

இஸ்ரேலிய அரபு மக்களுக்கு சலாம்: தேர்தல் தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் அரசியல் தாக்கம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இஸ்ரேலில் அரபுத் தலைமைகளின் கீழ் செயற்படும் இரு பிரதான அரசியல் கூட்டணிகள் தேர்தலில் போட்டியிட்டு, மொத்தமாக 19 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத் தீர்மானங்களில் அரசியல் ரீதியாகப் பேரம் பேசக்கூடிய பலமிக்கத் தரப்பாகத் தங்களை அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர்.

இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை கிடையாது. நாடாளுமன்றத்தின் ஊடாகவே பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.” – என்றார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலுடன் இதனை ஒப்பிட்டுப் பேசிய அவர்,

“இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நண்பர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அலைக்கு அடிபணிந்து வாக்களித்தனர்.

இதன் பரிதாபகரமான விளைவாக, இன்று பல தமிழ் பேசும் மாவட்டங்களில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாத அவல நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், இஸ்ரேலிய அரபுச் சிறுபான்மை மக்கள் அரசியல் தனித்துவத்துடன் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்குக் கண் திறக்கும் பாடமாகும். நான் கூறுவதன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குச் சிந்திக்கும் ஆற்றல் அவசியம். இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம்.” – என்றார்.

………

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு – சஜித் குற்றச்சாட்டு

அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் ஊடாக 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளும் நிர்மூலமாக்கப்பட்டு, நாடு ‘போல் பொட்’ பாணியிலான சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்தப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும், ஒட்டுமொத்த நாட்டையும் ஒரேயொரு அரசியல் கட்சிக்கு அடிபணியச் செய்து 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வெட்கக்கேடான நடவடிக்கையாகும்.

கம்போடியாவின் கொடூர ஆட்சித் தலைவரான போல் பொட்டின் ஆட்சியை எமது நாட்டிலும் முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இந்தச் சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றது.

இதற்கு முன்னர் துப்பாக்கிப் பிரயோகங்கள், தடியடிகள் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை, இன்று சட்டப் புத்தகங்களுக்குள் உள்வாங்கிச் சட்டபூர்வமாக முன்னெடுக்கப் பார்க்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக வழியிலும் மக்கள் பலத்துடனும் இதனைத் தோற்கடிப்போம்.” – என்றார்.

புதிய சட்டமூலங்களின் ஆபத்துகள் குறித்து மேலும் விளக்கிய சஜித் பிரேமதாஸ,

“இந்தச் சட்டங்களின் ஊடாகச் சுதந்திரமான நீதிமன்றங்களின் அதிகாரங்கள் கூடக் கேவலப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றத்துக்குரிய அதிகாரங்களைப் பறித்து நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பதுடன், ‘பயங்கரவாதி யார்’ என்பதை வரைவிலக்கணப்படுத்தும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரத்துக்கே  வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய தரப்பினரைப் பயங்கரவாதிகளாக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிச் சர்வதேச ஜனநாயக நியமங்களுக்கு அமைவான சட்டமே கொண்டுவரப்படும்’ எனக் கூறிய அநுர அரசு, இன்று பழைய சட்டத்தை விடப் பாரதூரமான அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என வாக்குறுதியளித்த ஆட்சியாளர்கள், 220 இலட்சம் மக்களையும் நிர்கதியில் தள்ளிவிட்டுத் தங்களது நாடாளுமன்றத்தின் 159 உறுப்பினர்களுக்கும் மட்டுமே அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.” – என்று தெரிவித்தனர்.

…….

நோர்வூட் பிரதேச சபை உறுபினரானார் செல்லதுரை ஜெகநாதன்!

நோர்வூட் பிரதேசசபை உறுப்பினராக செல்லதுரை ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பிரதேச சபையில் தொழிலாளர் தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் கூட்டணியாக போட்டியிட்டது. கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் சுழற்சி முறையில் வழங்க கட்சி தீர்மானித்ததன் அடிப்படையில் இரண்டாம் காலப்பகுதிக்கு சுழற்சி முறையில் செல்லதுரை ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் தெரிவத்தாட்சி அலுவலர் அடுகெதர சோராதிபதி ராதா சுபாசிணி கையொப்பமிட்டு 12.10.2026 ம் திகதி வெளியிட்டுள்ள வர்த்தமானியினூடாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினராக செல்லதுரை ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை பிரதேசத்தின் பிரதான அமைப்பாளர் நடராஜா சிவகுமார் உறுப்பினராகவும் உப தவிசாளராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

…………

நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பர் மாதத்தில் பணவீக்கம், 8.0 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்ரோபரில், 0.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

ஒக்ரோபர் மாத உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும், உணவு அல்லாத பணவீக்கம் 8.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

………

வங்கிக் கணக்கு ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு நாளை முதல் TIN கட்டாயம்

இலங்கையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், காணிகளைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளுக்கு நாளை (நவம்பர் 1) முதல் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 102(3) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தும்.

இதன்படி, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், காணிகள் அல்லது காணி உரிமைகளைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல், இலங்கை நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் போது, பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவர் ஆகிய இருவரும் தங்களது TIN விபரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

இந்தப் பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துவதற்கு முன்னர், உரிய TIN ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் மின்னணு சேவைத் தளத்தின் (e-Services) ஊடாக முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services இணையத்தளத்தின் ஊடாக தனிநபர்கள் தங்களது TIN இலக்கத்தைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதன்போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றைக் கொண்ட சரிபார்ப்பு முடிவின் அச்சுப் பிரதியை உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாகச் சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இலங்கை வதிவிடத் தனிநபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

அத்துடன், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் அந்த வயதை அடைந்தவுடன் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

………..

WhatsApp ஊடாக நிதி மோசடி செய்த பெண் கைது

பரிசுப் பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சுமார் 14 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்ஸ்அப் செயலி ஊடாக அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கணனி குற்றத் தடுப்பு பிரிவின் வடமேல் மாகாணத்திற்கான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதற்கமைய சந்தேக நபரான பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடச் செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

………

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹரிணி பங்கேற்பு

கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெறவுள்ள 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கை சார்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார்.

குறித்த மாநாடு, அந்தநாட்டின் சென் ஜோன்ஸ் நகரில் நாளை (01) முதல் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“செழிப்பான பொதுநலவாய அமைப்புக்கான கூட்டாண்மைகள் மற்றும் முதலீடுகளைத் துரிதப்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் பொதுநலவாய அமைப்பின் 56 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், மாநாட்டின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், பல நாடுகளின் அரச தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles