பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பவற்றை மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இப்போராட்டம் நடத்தப்படும் என மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.
திருத்தங்கள் இன்றி, இவ்விரு சட்டமூலங்களும் முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என்று மேற்படி முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வலியுறுத்தினார்.
……………
மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது – அரசு

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்று பாரதூரமானதல்ல. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அது எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
……….
எதிரணியின் வாயை மூடுவதற்கு முயலாதீர்! சஜித் கொந்தளிப்பு

சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமையால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் குறித்துப் பேசுவதற்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நிலையான நடைமுறைகளைப் பின்பற்றியும் தனக்குச் சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்கட்சியின் குரலை நசுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-
“நிலையியல் கட்டளைகள் 29(1), (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை தயாரித்து அதனைச் சபாநாயகரிடமும் பிரதி சபாநாயகரிடமும் கையளித்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கும் பிரேரணைகளை முன்வைப்பதற்குமான உரிமை தொடர்பிலேயே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையைக் கையளிப்பதற்காகக் காலை 9.15 மணிக்குச் சபாநாயகர் அலுவலகத்துக்கு வருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட நேரத்தில் சபாநாயகரோ அல்லது பிரதி சபாநாயகரோ தமது அலுவலக அறைகளில் இருக்கவில்லை.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதைச் சபாநாயகரே நிராகரித்தமையால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் குறித்தே நான் பேச விளைகின்றேன். எனவே, இப்போதாவது இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் தாருங்கள்.
சபாநாயகர் என்ற வகையில் நிலையியல் கட்டளைகளை மீறாது செயற்படுமாறு பிரதி சபாநாயகரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். எதிர்க்கட்சியின் வாய்களை மூட முற்படாமல், சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க எமக்கு உரிய வாய்ப்பை வழங்கிடுங்கள்.” – என்றார்.
…………
நாடாளுமன்ற நடைமுறைகூட தெரியாத எதிரணி – ஆளுங்கட்சி சாட்டையடி

சபாநாயகர் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல் ஆளுங்கட்சி நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கென உரிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நடைமுறைகள்கூட நாட்டின் எதிர்க்கட்சியினருக்குத் தெரியவில்லை.
பாடசாலைகளில் நடைபெறும் மாதிரி நாடாளுமன்ற அமர்வுகளில்கூட மாணவர்கள் பிரேரணைகளைச் சிறப்பாக முன்வைக்கின்றனர். ஆனால், நாட்டின் எதிர்க்கட்சியினருக்கு அது தொடர்பில் போதிய தெளிவில்லை.
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றனர். குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை முறையாகவும் தெளிவாகவும் முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, தூஷண வார்த்தைகளை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கக்கூடாது.
முறையான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதனை விவாதிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
அதேபோன்று, சபாநாயகர் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே எமது கட்சி அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கும். ஆனால், சபாநாயகர் எந்தத் தவறும் இழைக்கவில்லை” என்றார்.
……………
இலங்கைக்கு 10 மில்லியன் யூரோ வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பசுமைப் பொருளாதார மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் மூலம் இலங்கையின் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் இயலளவை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத் தரநியமங்களுக்கு இணங்கிச் செயற்படுவதை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நான்கு ஆண்டுகளுக்கு இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
………….
நுவரெலியா உட்பட 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (நவம்பர் 03) மாலை 4 மணி முதல் நாளை (நவம்பர் 04) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் நிலை – செம்மஞ்சள் (எச்சரிக்கை) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு:
– பதுளை மாவட்டம்: எல்ல, ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை.
– கண்டி மாவட்டம்: உடுநுவர மற்றும் உடதும்பர.
– மாத்தறை மாவட்டம்: கொட்டபொல.
– நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன.
– இரத்தினபுரி மாவட்டம்: கலவான மற்றும் கொடகவெல.
இதற்கிடையில், முதலாம் நிலை – மஞ்சள் (விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்) எச்சரிக்கையும் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகள் வருமாறு:
– பதுளை மாவட்டம்: வெலிமடை, மீகஹகிவுல, பசறை மற்றும் கந்தகெட்டிய.
– கண்டி மாவட்டம்: தொலுவ, தும்பனே, மெததும்பர,
யட்டிநுவர, மினிப்பே மற்றும் ஹதரலியத்த.
– கேகாலை மாவட்டம்: அரநாயக்க, மாவனெல்ல, ருவன்வெல்ல, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை,
புலத்கொஹுபிட்டிய மற்றும் கேகாலை.
– குருநாகல் மாவட்டம்: ரிதீகம மற்றும் இப்பாகமுவ.
– மாத்தளை மாவட்டம்: பல்லேபொல.
– நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு, அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, வலப்பனை மற்றும் நோர்வூட்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
………….
TIN சான்றிதழ் இல்லாமலும் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தையும் புதுப்பிக்கலாம்!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தற்காலிக நிவாரணத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, TIN சான்றிதழை உடனடியாகச் சமர்ப்பிக்காமலேயே வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட அடிப்படை தனிப்பட்ட விபரங்களைப் பயன்படுத்தி குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, TIN இலக்கம் இல்லாதவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தேவையான தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்குகளைத் திறக்க முடியும்.
அதேபோன்று, வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும்போது, TIN சான்றிதழுக்குப் பதிலாக தேசிய அடையாள அட்டை விபரங்களை உரிய பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்து சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும், இந்தத் தற்காலிக ஏற்பாடு TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நீக்கவில்லை என அமைச்சர் வலியுறுத்தினார். எனவே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றமின்றி படிப்படியாக TIN பதிவுகளைப் பூர்த்தி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.7 கோடி மக்களில், இதுவரை 1.3 கோடி பேருக்கு TIN இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 40 இலட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதால் ஒருவர் தானாகவே வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சுமார் 1.3 கோடி பேருக்கு TIN இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சுமார் 12 இலட்சம் வருமான வரிக் கோப்புகளே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பது மற்றும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது ஆகியவற்றிலேயே அதிகளவிலான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகளில் இதேபோன்ற இடையூறுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவது மற்றும் இணையவழிப் பதிவு முறைமையை அணுகுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நவம்பர் 1ஆம் திகதிக்குப் பின்னர் TIN பதிவுகளை மேற்கொள்ள முடியாது என வெளியாகும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரந்த நோக்கங்களின் ஒரு பகுதியாக, தகுதியுடைய அனைவரையும் படிப்படியாக TIN பதிவு முறைமைக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
……………
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர்கள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள சம்பள மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள், பணியாளர் பற்றாக்குறை மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பான கவலைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
மருத்துவத் துறையினரையும் நாட்டின் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் பாதிக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்துள்ளதாகவும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் அறிமுகப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களது மேலதிக சேவை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கைக் கைவிட்டதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற போதிலும், சுகாதாரத் துறையினரின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போதுமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என GMOA குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சரிடம் பலமுறை பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
………..










