டிட்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு ஆபத்துமிக்க பகுதிகளில் வசித்த வெலிமடை, அபரகல தோட்டப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில், 170 வீடுகளைக் கொண்ட புதிய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06) அபரகல பகுதியில் நடைபெற்றது.
850 மில்லியன் ரூபா முழுமையான அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த பாரிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. டிட்வா அனர்த்தத்திற்குப் பின்னர் ஒரே காணியில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய வீட்டுத்திட்டம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.5 ஏக்கர் பாதுகாப்பான நிலப்பரப்பில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ளதுடன், இதன்மூலம் 170 குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளை மாத்திரம் வழங்காமல், அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான கிராமமாக இதனை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சமூக மண்டபம், விளையாட்டு மைதானம், முறையான வீதி கட்டமைப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும், மக்களின் பொருளாதாரத்தையும் சமூக வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை, சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக வலுவூட்டல் திட்டங்களும் இக்கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மதத் தலைவர்கள், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல, வெலிமடை பிரதேச சபைத் தலைவர் அஜித் திசாநாயக்க, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
