ஈராண்டு ஆட்சி நாட்டிற்கு மாட்சியாம்; முழுக் கொழும்பும் வெள்ளத்தில் தத்தளிப்பு! – சஜித் சாடல்

ஈராண்டு ஆட்சி நாட்டிற்கு மாட்சி எனக் கூறி அரசாங்கம் கொண்டாட்டங்களை நடத்தி வரும் நிலையில், முழுக் கொழும்பு நகரமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, ஆறு மாதங்களில் நகரை புத்தெழுச்சி பெறச் செய்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஆனால், வடிகால் கட்டமைப்புகளை முறையாகச் சுத்தப்படுத்தி பராமரிக்கத் தவறியதன் விளைவாகவே அண்மைய மழையின்போது கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தலைநகரில் தேங்கும் மழைநீரைக்கூட முறையாக முகாமைத்துவம் செய்ய முடியாத அரசாங்கம் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய இளைஞர் சக்தியின் களுத்தறை, அகலவத்தை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாகவும், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புகள் தொடர்பிலும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தார்.
……………
வடக்கு, கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கள் விடுமுறை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான எதிர்வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் சனிக்கிழமை (14) பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
……………
மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாளை (8) நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படுபவர்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
……………..
கொழும்பு வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனை – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கொழும்பு மாநகர சபை மேயருக்கு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனை என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனசெத பெரமுன கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை வடிகால் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதே நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைகூட வெள்ளத்தில் மூழ்கியமைக்கு மாநகர சபை மேயரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் மக்கள் தற்போதைய நிர்வாகத்தைப் பதவியிலிருந்து அகற்றுவார்கள் என்றும் அவர் சவால் விடுத்தார்.
…………..
பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
பதுளை மாவட்டத்தின் பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் இருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
20 மற்றும் 32 வயதுடைய கனஎல மற்றும் பசறை 10ஆம் கட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஒருவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளும், மற்றைய சந்தேகநபரிடமிருந்து 40 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தமாக 90 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று (07) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
த.டிமேஷன்
……………
