மலையக மக்களுக்கு காணி உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கி அவர்களை முழுமையான குடிமக்களாக அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (15) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் பல சமூக செயற்பாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது கருத்துத் தெரிவித்த மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கணேஷலிங்கம், 1947ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும், நாட்டின் ஏனைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மலையக மக்களுக்கு இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு இதுவரை காணி உரிமை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பெருந்தோட்டப் பகுதிகளில் போதியளவு தரிசு மற்றும் பயன்படுத்தப்படாத காணிகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை மலையக மக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இற்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளிலேயே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அந்த நாளிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
