சஜித்தின் ஆரஞ்சு நிற ஆடை வைரல்: சபாநாயகரும் பாராட்டு

மாலைதீவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை பாதுகாப்பு செயலர் பேச்சு

இலங்கை பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, மாலைதீவு பாதுகாப்புத் தலைவர்களுடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவை அமைச்சர் ஹசன் ரஷீத் மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி ஆகியோருடன், இலங்கை பாதுகாப்பு செயலர் சந்தித்துப் பேசியுள்ளார்.

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ (Colombo Security Conclave) நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை பாதுகாப்புச் செயலர் மாலைதீவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில், குறிப்பாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தச் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

…………

கண்டியில் பொலிஸ் சீருடையில் படப்பிடிப்பு: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

 

கண்டி நகரில் பொலிஸ் சீருடை அணிந்து, முழுத் தாடியுடன் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பில் (Pre-shoot) ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடை அணிந்து, முழுத் தாடியுடன் ஒருவர் கண்டி யட்டிநுவர வீதியில் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் ராசிக்க சம்பத் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.

எனினும், விசாரணைகளின்போது கைது செய்யப்பட்டவர் தளங்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இந்து மத சம்பிரதாயங்களுக்கு அமைய தாடி வளர்ப்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த உத்தியோகத்தருக்கு திருமணத்தை முன்னிட்டு தாடி வளர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸ் சீருடையை அணிந்து புகைப்படப் படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகத் திணைக்கள மட்டத்திலான ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

……………

பல பகுதிகளில் மழை: மலையகத்துக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று(25) 100 மில்லிமீட்டருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இதனிடையே மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடநுவர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிடிய, கேகாலை, கலிகமுவ, எட்டியந்தொட்டை, மாவனெல்ல மற்றும் கேகாலை, ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான கடும் மழைவீழ்ச்சி காரணமாக, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அவதானமாக இருக்குமாறு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை (24) மாலை 4 மணி முதல் புதன்கிழமை (25) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, செவ்வாய்கிழமை (24) மாலை 6 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனல்லை மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

……………..

சஜித்தின் ஆரஞ்சு நிற ஆடை வைரல்: சபாநாயகரும் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று (25) நாடாளுமன்ற அமர்வில் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆடைத் தெரிவை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பாராட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, இந்தப் பிரசாரம் 16 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட கருத்துகளையும் அவர் பாராட்டினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் நெருக்கமான தனிப்பட்ட உறவுகளுக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்ற பிரதமரின் கருத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே தான் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து வந்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன்போது, நேரக் கட்டுப்பாடு காரணமாக உரையை நிறைவுசெய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, இடையூறுகளுக்கு மத்தியிலும் உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, நகைச்சுவை கலந்த தொனியில், “இன்று அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுவிட்டு, பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதிலளிக்குமாறு அழைத்தார்.

…………

கோட்டாபயவின் கைது தடுப்பு மனு: மார்ச் 5ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (25) நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மேன்முறையீட்டு மனுவை உறுதிப்படுத்துவதற்கான சமர்ப்பணங்களை மார்ச் 5ஆம் திகதி முன்வைக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அத்தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

…………

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த எதிரணியிடம் ஒத்துழைப்பு கோருகிறது அரசு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று எதிரணிகள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றினால், விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி., மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மேலும் கூறியதாவது:

“மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனக் கூறும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், தெரிவுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர்கள் அதில் பங்கேற்கவில்லை.

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு உரிய வாய்ப்பு இருக்கும்போது தமது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டு, வெளியே சென்று தேர்தல் குறித்து பேசுவதால் எந்தப் பயனும் இல்லை” என்றார் விஜித ஹேரத்.

………….

விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு சதி வழக்கு: இலங்கை பிரஜைக்கு இந்தியாவில் பிணை

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வன்முறை வழிகளில் மீள உருவாக்குவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மின் என்பவருக்குக் கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் சர்வதேசக் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து, விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதி செய்ததாக அஸ்மின் மீது என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்சி தடுப்பு முகாம்களில் இதற்கான இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், ஏ.கே-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சதித்திட்டம் அம்பலமாகியதுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாகவும், ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி ஊடாகப் பணப் பரிமாற்றம் செய்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிணை வழங்கப்பட்டமைக்கான காரணம்:

இந்த வழக்கில் இந்திய தேசிய புலனாய்வு முகவரத்தின் விசேட நீதிமன்றம், அஸ்மினுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதோடு, அவர் அரசாங்கத் தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைக்கவும் சம்மதித்துள்ளார்.

எனவே, அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலம் மற்றும் தொடர்புடைய வழக்குகளில் ஏனைய சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அவரைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நீதி பரிபாலனத்திற்கு உதவும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அஸ்மினுக்கு உரிய பாதுகாப்பை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேரள உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பிணைத் தொகையையும், அதே பெறுமதியான இரு நபர்களின் உத்தரவாதத்தையும் விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தனது கடவுச்சீட்டை ஒப்படைப்பதுடன், முழுமையான வதிவிட முகவரி மற்றும் தற்போதைய கைபேசி இலக்கத்தை என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

மேலும், விசேட நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் பிணை உத்தரவானது அஸ்மினுக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கான எந்தவொரு உரிமையையும் வழங்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள நீதிமன்றம், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவரது குடிவரவு நிலை குறித்து நடவடிக்கை எடுக்கக் குடிவரவு அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

……………..

ஆனந்த பாலித்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சமகி கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலிதவை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த நவம்பர் 16ஆம் திகதி முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 31 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது விளக்கமறியல் டிசம்பர் 04ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…………..

ஆட்டுப்பண்ணைக்குத் தீ வைப்பு; ஆடுகள் கருகிப் பலி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில், 2026 நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக எமது ஊடகவியலாளர் தில்சாத் பர்வீஸிடம் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆடுகளை வளர்த்து வருவதாகக் குறிப்பிட்டனர்.

“இவ்வாறு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அத்துடன், பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரும் வருகை தந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

…………

 

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles