டித்வா அனர்த்தத்தால் வீடுகளை இழந்த பதுளை, கண்டக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 குடும்பங்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (26) முடகமுவ பகுதியில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுடன் இணைந்ததாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதற்கமைய, பகுதியளவிலான சேதங்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவின் இரண்டாவது தவணையாக 12 பயனாளிகளுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும், மீள்குடியேற்றக் கொடுப்பனவின் முதலாம் தவணையாக ஒரு பயனாளிக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன.
அத்துடன், இரண்டாவது தவணையாக 13 பயனாளிகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், மூன்றாவது தவணையாக இரு பயனாளிகளுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதமும் காசோலைகள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, அனர்த்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து வசதிகளையும் மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அரசியல் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினேந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலஹம, கண்டக்கெட்டிய பிரதேச சபைத் தலைவர் ஹர்ஷ ரத்நாயக்க உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.










