நுவரெலியா , பம்பரகலை தொழிற்சாலைப் பிரிவில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படும் வீதியை உடனடியாகச் சீரமைக்கக் கோரி, இன்று (26.11.2026) பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த வீதி நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுவதுடன், வாகன விபத்துகளும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அன்றாடப் பயணங்களின்போது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் ஏழு தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குறித்த வீதியை எவ்வித தாமதமுமின்றி புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வீதிப் புனரமைப்புப் பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல், உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.
கௌசல்யா










