சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டில் இலங்கை- ரஷ்யா கைச்சாத்து

இலங்கையும் ரஷ்யாவும் இருதரப்பு சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நபர்களை மீண்டும் சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த உடன்பாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவது மற்றும் சட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நபர்களைக் கண்டறிந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அங்கு அவர்கள் மறைத்து வைத்துள்ள நிதிச் சொத்துக்கள் மற்றும் உடமைகளைக் கண்டறிவதற்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று குட்சன் உறுதியளித்தார்.
இலங்கையின் ‘குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம்’ ஆகியவற்றின் விதிகளுக்கு உட்பட்டே இந்த உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நீதித்துறை சார்ந்த விவகாரங்கள் மற்றும் இரு தரப்புக்கும் ஆர்வமுள்ள பிற துறைகளில் சிறிலங்கா வழங்கி வரும் ஒத்துழைப்பை ரஷ்ய சட்டமா அதிபர் பாராட்டினார்.
இந்தச் சந்திப்பில் ரஷ்ய உயர் அதிகாரிகள் மற்றும்இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
………….
இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டெல்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லி சென்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர் “இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.
நமது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தின் நிலைமை குறித்து விவாதித்தோம்.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர் தொலைநோக்கு’ முயற்சி ஆகியன குறித்து இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தில் (IORA) மேலும் கலந்துரையாடல்களை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
…………
மாற்றுத்திறனாளிகளுக்கு டிசம்பர் 3ஆம் திகதி மெட்ரோ பேருந்துகளில் இலவசப் பயணம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை வழங்குமாறு லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (LMT) நிறுவனத்திடம் முன்னதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த கோரிக்கைக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, டிசம்பர் 3ஆம் திகதி மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க முடியும்.
……………
நவம்பர் 30 தொழிற்சங்க போராட்டத்துக்கு வலுக்கிறது ஆதரவு

நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.
இன்று (27) நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, பல ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறான பங்களிப்பை வழங்கவுள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.
………..
லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவின் சாட்சியம்; அடுத்த கட்ட விசாரணை பெப்ரவரி 12இல்!

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல்
செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இன்று (27) பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக அவர் வழங்கிய சாட்சியங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பதிவு செய்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக பெப்ரவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
………..
பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளுக்குத் தடை இல்லை

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் அரசாங்கம் எந்தவொரு சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது தங்களது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல முடியும்.
எனினும், பொலிசுக்குள் சிறை அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.”- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
…………
சட்டத்துக்கு சாட்சியே முக்கியம்: அரசியல் அடையாளம் அல்ல

நீதித்துறையை அரசியல் பழிவாங்கலுக்கான கருவியாகப் பயன்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் முற்படாது. எனினும், எவரேனும் தவறிழைத்தமைக்கான உரிய சாட்சியங்கள் இருக்குமாயின், அவர்களின் தகுதி, தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
தனிநபர்களின் அரசியல் அடையாளங்களின் அடிப்படையில் அல்லாமல், சாட்சியங்கள் மற்றும் நீதியின் அடிப்படையிலேயே சட்டம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு சட்டமொன்று அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பில் குழுநிலை விவாதத்தின்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களே இந்தச் சட்டம் தொடர்பில் அச்சமடைய வேண்டும். ஆனால், இச்சபையில் உள்ள சிலர் அச்சமடைவதுதான் வியப்பளிக்கிறது.
அதேவேளை, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளும் வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை நாம் மதிக்கின்றோம்” என்றார்.
……………
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு
இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஏற்பத் தனது டிஜிட்டல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளும் இணைந்து திறன்களைக் கட்டியெழுப்பும் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
WION மற்றும் SAP நிறுவனங்களால் நேற்று (26) ஏற்பாடு செய்யப்பட்ட ‘டிஜிட்டல் ஸ்ரீலங்கா உச்சிமாநாடு 2026’ (Digital Sri Lanka Summit 2026) நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா – இலங்கை இருதரப்பு உறவில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியன முக்கிய தூண்களாக உருவெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், அங்கு மேலும் கூறியதாவது:
கடந்த தசாப்தத்தில் இந்தியா முன்னெடுத்துள்ள டிஜிட்டல் மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் எடுத்துரைத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் திறந்த அணுகுமுறை ஆகிய கொள்கைகளின் கீழ் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை (DPI) உருவாக்குவதில் இந்தியா பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக, இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டமான (SLUDI) செயற்திட்டத்திற்காக இந்தியா 25 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
…………
சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்து, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குப் பிரதான நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.










