வலுவான நிலையில் கொழும்பு, டெல்லி உறவு: பிரதமர் மோடியுடன் விஜித ஹேரத் சந்திப்பு

உலக பௌத்த சங்க சம்மேளன  விழாவில் ஜனாதிபதி அநுர பங்கேற்பு   
ஆயுதங்கள், போர் போட்டி, பிளவுகள் மற்றும் மன உளைச்சல் ஆகிய உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடும் ஒரு காலகட்டத்தில், ஒவ்வொருவரும் தம் வாழ்வையும், சமூகத்தையும், நாட்டையும் கட்டியெழுப்ப பௌத்தம் காட்டும் நடைமுறை வழிகாட்டல் மிகவும் முக்கியமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பௌத்தம் நமக்குக் கற்பிப்பது மற்றவர்களை மாற்றுவதற்கு முன்னர் நம்மிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குவதையும், பலத்தினாலோ வெறுப்பினாலோ உலகை வெல்லாமல், புரிதலினாலும் அமைதியினாலும் இதயங்களை வெல்வதையுமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த உன்னதமான தர்மம் எப்போதும் இந்த உலகிற்கு மகிழ்ச்சிக்கான பாதையைத் திறக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
களனி, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்தக் கற்கை நிறுவனத்தில் நடைபெறுகின்ற உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60 ஆவது ஆண்டு நிறைவு நினைவு விழாவின் தொடக்க நிகழ்வில் இன்று (28) காலை கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாகானந்த சர்வதேச பௌத்தக் கற்கை நிறுவனத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.
டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தச் சர்வதேச சம்மேளன மாநாட்டில் தேரவாத, மகாயான மற்றும் வஜ்ரயான ஆகிய பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிக்குமார், பிக்குணிமார் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி  முப்பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் சுமார் 5,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இத்தகைய சர்வதேச அளவிலான நினைவு விழாவை இலங்கையில் நடத்துவதற்குக் கிடைத்தமை நாட்டிற்குப் பெருமையளிப்பதுடன், நமது நாட்டின் பௌத்த பாரம்பரியம் மற்றும் மத அடையாளத்தை சர்வதேசத்தின் முன் மீண்டும் வெளிப்படுத்தக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் புத்த பெருமானின் போதனைகள் குறித்து மீண்டும் ஆழமாக ஆராய்வதும், அப்போதனைகளுக்கு ஏற்ப நடப்பதும் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் எனக் குறிப்பிட்டு, அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டுத் தொகுக்கப்பட்ட நினைவு மலர் மற்றும் அதற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஆகியன இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
…………

பணவீக்கம், வறுமையால்மக்கள் வாழ முடியாத நிலை- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை

 

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பணவீக்கம் 9 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடும் வேளையில், நாட்டில் வறுமை விகிதம் 60 சதவீதம் என உலக வங்கி தெரிவித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழலில் சமூக வலுவூட்டலுக்கு மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தி, நவீன யுகத்துக்குப் பொருத்தமான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் அனைத்துத் துறைகளிலும், ஒவ்வொரு கிராமம், நகரம் மற்றும் மாகாணத்திலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கமான சட்டகத்துக்குள் முடங்கிவிடாமல் புதிய முறையில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 17ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, மகாவெலி கேந்திர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் முடிவடைவதால், ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக நாட்டின் தேசிய உற்பத்தி, கைத்தொழில், சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடனைச் செலுத்த முடியாமல் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலையை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசு கையெழுத்திட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடும் மக்களுக்கு எதிரான ஒன்றாக உள்ளது என்று தெரிவித்த அவர், இந்தச் சூத்திரத்தின்படி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது கடன் நிவாரணம் குறையும் கடன் பொறியில் நாடு சிக்கியுள்ளது என்றும் கூறினார்.

தற்போதைய இணக்கப்பாட்டை மாற்றுவதாகக் கூறினாலும், அரசு அதனை அப்படியே நடைமுறைப்படுத்துகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரச மற்றும் தேசியக் கொள்கைகளை உருவாக்கி, அவற்றை அடித்தள மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் நிறைவேற்றுகின்றனர் என்றும், அவர்களின் சேவை உயர்ந்த மதிப்புக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு காணத் தமது தரப்பு ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு நெருக்கமான அரச சேவையான கிராம உத்தியோகத்தர் சேவைக்குப் பொருத்தமான சம்பள அளவுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரச சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட சம்பள அளவுத்திட்டத்தை வழங்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். தமது ஆட்சியில் இந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குழு அங்கீகரித்த 20 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவு கிடைப்பதில்லை என்றும், 2027 ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு அனர்த்தத்தின்போதும், அபிவிருத்தி மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின்போதும் கிராம உத்தியோகத்தர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டிய அவர், இத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் தொடர்பான நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களில் ஒருவராக, சுற்றாடலைப் பாதுகாக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் கிராம உத்தியோகத்தர்களுக்கு விசேட பங்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எல்நினோ, லாநினா காரணமாக வானிலை மற்றும் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிணறன என்றும், வறட்சி போலவே பெருமழை உள்ளிட்ட அபாயங்களும் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள் என்பதால், அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், பேரழிவு ஏற்பட்ட பின்னர் பதிலளிப்பதற்குப் பதிலாக, முன்கூட்டியே கணித்து அதன் விளைவுகளைக் குறைக்கும் முன்னாயத்தத் திட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

……….

வலுவான நிலையில் கொழும்பு, டெல்லி உறவு: பிரதமர் மோடியுடன் விஜித ஹேரத் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புது டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளின் சங்கத்தின் (IORA) உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுத் தலைவர்களுடன் இணைந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

IORA அமைப்பின் 25ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தின் பக்க நிகழ்வாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக விஜித ஹேரத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார , பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

………..

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 43 இலங்கை குற்றச்சந்தேக நபர்களுக்கு வலை

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 43 இலங்கைச் சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 17 பேர் டுபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும், ஏனைய ஒன்பது பேர் வேறு ஒன்பது நாடுகளிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்த 72 சந்தேக நபர்கள் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

………….

தென்கொரிய வீதி விபத்தில் இரு இலங்கையர்கள் பலி – சடலங்களை நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை

 

 

தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் இரத்தினபுரி, கோடகாவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தேஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் நுவரெலியா, வலப்பனை, ஹல்கரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவின் ஹ்வாசோங் நகரில் உள்ள ஜங்கான் பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக, அவர்களது குடும்பத்தினர், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

………….

பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று (28), பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் (103, 222 முதல் 224, 304, 325) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.

குழுநிலை விவாதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 6.20 மணியளவில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் இலக்க செலவுத் தலைப்பு தொடர்பில்
வாக்கெடுப்பொன்றைக் கோரினார். அதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 81 மேலதிக வாக்குகளால் குறித்த (103) செலவுத் தலைப்பு நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய செலவுத் தலைப்புகள் (189, 226, 320) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

………..

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles