பாலித்த தெவரபெரும மீதான தாக்குதலுக்கு ஆனந்தகுமார் கடும் கண்டனம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும மீதான தாக்குதல், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே தான் கருதுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

களுத்துறை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் தமிழர்களை பாதுகாக்க முன்னின்று செயற்பட்டு வரும் பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, சிறுபான்மை சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதை போன்று உணர முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பாலித்த தெவரபெருமவை நாகொட வைத்தியசாலைக்கு சென்று எஸ்.ஆனந்தகுமார் இன்று பார்வையிட்டு, அவரின் உடல்நலம் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு பாதுகாவளனாகவே பாலித்த தெவரபெரும இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது மிலேச்சத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்த கணம் முதல் தமிழர்களின் இதயங்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் தலைவர்கள் இருக்கின்ற போதிலும், மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட பகுதிகளான இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளை அவ்வாறான தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என எஸ்.ஆனந்தகுமார் கூறுகின்றார்.

எனினும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரான பாலித்த தெவரபெருமவே, மலையகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாவளனாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலித்த தெவரபெருமவின் வழிகாட்டலின் கீழ் தான் ஒதுக்கப்பட்ட மலையக சமூகத்தின் தலைமைத்துவத்தை ஏற்று, அந்த மக்களின் பாதுகாவளனாக செயற்படுவதாக பாலித்த தெவரபெருமவிடம், எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles