2025 ஆம் ஆண்டளவில் நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி பலப்படுத்தப்படும் என்று முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு (14.03.2021) இன்று ஹட்டனிலுள்ள முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக பல துன்பங்களை சந்தித்து வருகின்றது. நான்கு பக்கங்களிலும் நெருக்கடிகள். குறிப்பாக அனுசாவின் விலகல், அரவிந்தகுமாரின் செயற்பாடு, முற்போக்கு கூட்டணியின் அழுத்தம், எதிரணியில் இருக்க வேண்டிய நிலை என்பவற்றை முக்கியமாக குறிப்பிடலாம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார். அனைத்தும் இறுகியுள்ளது. ஆகவே அங்கத்தவர்களின் ஒற்றுமயே இதிலிருந்து மீள ஒரே வழியாகும். 2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகும்.
அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனேனில் மலைக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்படும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் அகைச்சாத்திடுகின்றன. எனவே மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டில் புரையோடி போயுள்ள இன பிரச்சினையை தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல் பெண்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரனை அவசியம். தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. ஆகவே மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.’ என்றார்.
க.கிசாந்தன்
