மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அரவிந்தகுமார் எம்.பி., வெகுவிரைவிலேயே புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவுள்ளார் என அவருக்கு நெருக்கமான சிலர் தகவல் வெளியிட்டனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அரவிந்தகுமாரை ஆரம்பத்திலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி இடைநிறுத்தியது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி விசாரணைகளை ஆரம்பித்த மலையக மக்கள் முன்னணி, 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரவிந்தகுமார் எம்.பியை கட்சியை விட்டும், அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக அண்மையில் நீக்கியது.
” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே, அவர்கள் செய்த தவறுக்கு ஆயிரம் பதில்களை சொல்வார்கள் என ஹிட்லர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரவிந்தகுமார் எம்.பியும் தெரிந்தே தவறு செய்துள்ளார்” – என அரவிந்தகுமாரை முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் மறைமுகமாக துரோகி என விமர்சித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் இந்த நகர்வால் சினமடைந்துள்ள அரவிந்தகுமார் எம்.பி., பதுளை மாவட்டத்தில் உள்ள முன்னணியின் ஆதரவாளர்களை தம்பக்கம் வளைத்து போட்டுள்ளார். கட்சி தொண்டர்களுடன் அடுத்தக்கட்டம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றார்.
இதன்பிரகாரம் விரைவில் புதியதொரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்பக்கூடும் எனவும், அதனை மையப்படுத்தியே தற்போது நகர்வுகள் இடம்பெறுகின்றன எனவும் தெரியவருகின்றது.










