இந்தியாவில் 8 ஆவது நாளாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்நாட்டில் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 04 ஆயிரத்து 832 ஆகி இருக்கிறது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.










