தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருக்கின்றவர்கள் வருமானம் இல்லாத காரணத்தால் உணவின்றி பல நாட்கள் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றார்கள்.
இன்றைய சூழ்நிலையில் யாருக்கு இந்த அரசாங்கத்தின் உணவு பொதிகள் கிடைக்கும் என்ற தெளிவில்லாத ஒரு நிலைமை மக்களிடம் காணப்படுகின்றது. இது தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது.
ஒரு கிராமமோ அல்லது பெருந்தோட்ட பகுதியோ முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீடுகளில் இருக்கின்ற அனைவருக்கும் இந்த நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாது.
கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்பங்களுக்கும் தொடர்பில் இருந்தவர்களை வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் 10000.00 ரூபா பெறுமதியான உதவு தொகை அல்லது அந்த பெறுமதிக்கான உலர் உணவு பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
அது தவிர் ஒரு குறிப்பிட்ட பகுதி 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்படுமாக இருந்தால் அந்த பகுதியில் இருக்கின்றவர்களுக்கு வாரத்திற்கு 5000.00 ரூபா வீதம் பெற்றுக் கொடுக்கப்படும்.எனவே இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்படுகின்றோம்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருக்கின்றவர்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அவர்கள் அங்கிருக்கின்ற குடும்ப நல உத்தியோகஸ்தருடன் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கான ஒரு ஏற்பாட்டை அவர் அந்த பகுதியில் இருக்கின்ற ச.தொ.ச ஊடாக ஏற்பாடு செய்து தருவார் என அவர் தெளிவுபடுத்தினார்.
ஆனால் இங்கிருக்கின்ற பிரச்சினை என்னவெனில்.ஒரு கிராமம் அல்லது பெருந்தோட்ட பகுதி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டால் அங்கிருக்கின்றவர்கள் வெளியில் தங்களுடைய தொழிலுக்கு செல்ல முடியாது.
இதன் காரணமாக அன்றாட தொழில் செய்து வருமானத்தை பெறுகின்ற குடும்பங்களின் நிலைமை என்ன?அவர்களுக்கான வருமானம் என்ன?இப்படி பல கேள்விகள் எழுகின்றது.
இந்த கேள்விகளுக்கு அரசாங்க அதிபரோ அல்லது பிரதேச செயலாளரோ கிராம சேவகர்களோ பதில் கூற முடியாது. இதற்கான பதிலை அரசாங்கமே கொடுக்க வேண்டும்.
எனவே இந்த விடயம் தொடர்பாக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.காரணம் இந்த தொற்று இன்னும் சில வருடங்களுக்கு நீடிக்கலாம்.அப்படியானால் அது தொடர்பாக ஆராய்ந்து என்ன செய்ய முடியும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
இன்று பல அமைச்சர்கள் அபிவிருத்திக்காக அடிக்கல் நாட்டுகின்றார்கள். ஆனால் அந்த பகுதயில் இருக்கின்ற பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். இந்த நிலைமை தொடருமானால் கொரோனாவால் உயிரிழக்கின்றவர்களின் தொகையைவிட உணவின்றி உயிரிழப்பவர்களின் தொகையே அதிகமாகும்.
எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுப்பார்களா?
