தெரணியகல, மாலிபொட பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீடமைப்பு திட்டமொன்றை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அப்பகுதியில் 171 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மேற்படி திட்டத்தின் முதற்கட்டமாக 60 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியிலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தெரணியகல பிரதேசத்தில் நடைபெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே, மாலிபொடவை சுற்றியுள்ள பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீடமைப்பு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய முன்மொழியப்பட்ட வீடுகள் அடங்கலாக 480 தோட்ட வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
