நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எதிர்வரும் (11) ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய மாகாண செயலணிக் கூட்டம், மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருகளுக்கும் கொரோனா தடுபூசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தடுப்பூசி பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது என இ.தொ.கா. ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுபூசிகளும், மாத்தளை மாவட்டத்திற்கு 25ஆயிரம் தடுபூசிகளுமாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 பொது சுகாதார காரியாலய பிரிவில் முதல் ஆறு பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகமாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் பொகவந்தலாவ, அம்பகமுவ, லிந்துல்ல, கொட்டகலை, நுவரெலியா,மற்றும் நுவரெலியா மாநகர சபை போன்ற பொது சுகாதார அதிகாரி பிரிவுகளில் 50 ஆயிரம் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.
இதன்போது 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும், தெரிவு செய்யபட்ட கர்ப்பிணி தாய்மார்கள, மற்றும் தோட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் தடுபூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












