வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஓரணியில் திரள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, சமசமாஜக்கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகியன அமைச்சர் கம்பன்பிலவுக்கு ஏற்கனவே நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க அக்கட்சியின் உயர்மட்டகுழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஆளுங்கட்சியின் உயர்மட்ட பிரமுகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். பஸில் ஆதரவு அணி உறுப்பினர்களின் நிலைப்பாடு இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசு மீளப்பெற்றால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி வாபஸ் பெறும் என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மீளப்பெறுதல் அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதல் ஆகியவற்றை இலக்காக வைத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது கட்சி கொண்டுவந்தது. எனவே, இது நடந்தால் பிரேரணையை மீளப்பெறுவதில் சிக்கல் இல்லை என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை உயர்வு திட்டம் மீளப்பெறப்படாதபட்சத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வருவது உறுதி எனவும் அவர் கூறினார்.