6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில்! நிர்ணய விலையும் அறிவிப்பு!!

” அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அரிசி, கையிருப்பில் உள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் தளர்வு போக்குக்கு இடமே இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே திட்டவட்டமாக அறிவித்தார்.

கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகளிடமிருந்து இம்முறை நாட்டு அரிசி நெல் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும், சம்பா அரிசி நெல் 52 ரூபாவுக்கும், பச்சை நெல் 44 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும். மேற்படி விலைகளே நிர்ணயிக்கப்பட்டன.

நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக  இன்று முதல் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். ஏனைய காலப்பகுதிபோல் தாமதம் ஏற்படாது. விவசாயிகளுக்கு உடன் பணம் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் கெகுலு அரிசி ஒரு கிலோவை 98 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவுக்கும் விற்பனை செய்யமுடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் விலை நிர்ணயித்துள்ளார். அதனால்தான் ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபாவை நிர்ணயித்தள்ளோம். வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் அது செயலுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு அரசுக்கு எதிராக உள்ளது.

எனவே, இம்முறை சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும். அதிக விலைக்கு இனி அரிசி விற்கமுடியாது. இனிமேல் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
சேதனப் பசளை மூலம் விவசாயம் என்ற முடிவில் இருந்து அரசு மாறாது.” – என்றார்.

Related Articles

Latest Articles