ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே சந்திப்புக்கு திகதி கோரப்பட்டுள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருக்கும் சுதந்திரக்கட்சி, மொட்டு கட்சியின் செயற்பாடுகளை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவருகின்றது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பும் இடம்பெறவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சு.க.வினர், ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கின்றனர்.
அரசியல் பிரச்சினை, உரப்பிரச்சினை, வெளிவிவகாரக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் எனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.










