ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெப்பட் தோட்டத்தில் கடந்த மே 21 ஆம் திகதி இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் உரிய முறையில் எவ்வித நிவாரணத்தையும் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் இவ்விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞன்மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தோட்ட முகாமையாளரின் வீட்டில் காவலாளியாக பணிபுரியும் நபரொருவரே இவ்வாறு தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இளைஞன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தோட்ட நிர்வாகத்தால் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும், கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனவும் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்க வேண்டும் என்றும் தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.










