” எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே கட்சி இன்றும் இருக்கின்றது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி மட்டத்தில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளும், சாகர காரியவசம் வழங்கிய பதில்களும் வருமாறு,
கேள்வி – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில் – எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து கிராம மட்டத்திலான எமது கட்சி உறுப்பினர்களின் பிரதிபலிப்பையே நாம் கட்சி என்ற வகையில் அறிக்கையாக வெளியிட்டோம். அதற்கான உரிமை எமக்கு உள்ளது.
தற்போதைய நிலைவரம் (நம்பிக்கையில்லாப் பிரேரணை) தொடர்பில் எமது கட்சி தலைவர்களும், ஏனைய கட்சி தலைவர்களும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார்கள்.
கேள்வி – அப்படியானால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்று இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையா?
பதில் – இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்துவதற்கும், அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதற்குமிடையில் வித்தியாசம் உள்ளது. எனவே, எதிரணியின் பொறிக்குள் சிக்கி செயற்படுவதற்கு நாம் தயாரில்லை. அதேபோல அன்று கட்சி எடுத்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாகத்தான் இருக்கின்றோம். அந்த நிலைப்பாடு மக்களுக்காக எடுக்கப்பட்டதே தவிர, எதிரணிக்காக எடுக்கப்பட்டது அல்ல.
கேள்வி – அமைச்சர் கம்பன்பிலவுக்கு ஆதரவு தெரிவித்து வகையில் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்ற உறுதியை கட்சி செயலாளர் என்ற வகையில் வழங்கமுடியுமா?
பதில் – இது தொடர்பில் எமது கட்சியின் தலைவர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பார்கள்.
கேள்வி – எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நீங்களும் கடுமையான நிலைப்பாட்டில்தானே இருந்தீர்கள்?
பதில் – நாட்டு மக்களுக்காக அன்று நாம் விடுத்த அறிவிப்பு சரி என்ற நிலைப்பாட்டிலேயே இன்றும் இருக்கின்றோம்.
கேள்வி – உங்கள் வாக்கு எப்படி?
பதில் – எமது கட்சி ஒழுக்ககட்டமைப்புள்ள கட்சியாகும். எனவே, கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவை நாம் ஏற்போம். அதனை பாதுகாப்போம். நாடு தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பதற்கு சந்தர்ப்பவாதிகளுக்கு அனுமதி வழங்கமுடியாது. மக்கள் ஆணையை பாதுகாப்போம். நாட்டு மக்கள் நின்று தீர்மானம் எடுப்போம்.” – என்றார்.
கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் ஜுன் 12 ஆம் திகதி கட்சியின் சார்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










