தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அடங்கிய விசேட அறிவித்தலை ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சகல ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த பிரேரணையை கட்டாயம் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுலை 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை, ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜுலை 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதும் இவ்விவகாரம் உட்பட ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டு காத்திரமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளுங் கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையிலேயே கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles