கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம நிகழ்வாகவே வீட்டுத்திட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபசெயலாளர் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி மலையக மக்கள் சார்பாகவும் ஊர் மக்கள் சார்பாகவும் இந்திய அரசாங்கத்திற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும் “இவ் வீட்டுத்திட்டத்திற்கு தேவையான பாதை வசதி குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகளை மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பூரண படுத்தப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்நேரத்தில் மறைந்த எங்களுடைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களையும் நான் நினைவு கூறுகின்றேன் அவரின் மூலமாகவே முதல் கட்டமாக 4000 வீடுகளும் அடுத்த கட்டமாக 10 ஆயிரம் வீடுகளும் எம் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

எதிர்வரும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாம் இலங்கைக்கு தொழிலாளர்களாக வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இவ் வீட்டுத் திட்டங்களை நாம் உருவாக்குவது இந்த லைன் அறைகளில் இருந்து விடுபட்டு எம் மக்களும் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக வேண்டும் என்ற நோக்கிலேயே ஆகும். என்னுடைய தேர்தல் காலத்தில் இவ்வூர் மக்கள் என்னிடம் வைத்த முக்கியமான கோரிக்கைகள் ஒன்றானது வீடுகள் கட்டப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியும் அவர்களால் இந்த வீடுகளுக்கு குடியேற முடியவில்லை என விசனம் பட்டனர் இதற்கு தீர்வு காணும் முகமாகவே நாம் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்து உங்களின் பாவனைக்காக கை அளிக்கிறோம் மேலும் இப்பிரதேசத்தில் காணப்படும் மொபைல் அலைவீச்சு இல்லாததன் காரணமாக இளைஞர்களும் சிறுவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகவே உடனடியாக இங்கு ஒரு சிக்னல் டவர் ஒன்றை நிறுவுவதற்கும் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மேலும் சுகாதாரத்துறை அபிவிருத்தி உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பவற்றை துரிதகதியில் நாம் முன்னெடுக்க உள்ளோம் மேலும் பணியில் பிரதேச செயலாளர் பிரிவு அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக மாற்றுவது என்னுடைய நோக்கம். அதனை நிச்சயமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலும் எமது அரசாங்கத்தின் உதவியுடனும் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பாரத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் தோட்ட கமிட்டி தலைவர்கள் சுகாதார அமைச்சரின் செயலாளர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.










