சிறார்கள் மத்தியில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

” நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இதனை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது. எனவே, மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமை உருவாகும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை காணமுடிகின்றது. இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாமையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கோருகின்றோம்.

அத்துடன், நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. வணிக மற்றும் பொருளாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமை உருவாகக்கூடும்.”- என்றார்.

அதேவேளை, சிறார்கள் மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது என விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

” கடந்தவாரத்தைவிடவும் இவ்வாரம் அதிகளவு சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறார்களின் நலன் கருதியே பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா செல்லுதல், அநாவசியமான நடமாட்டம் உள்ளிட்ட நடவடிக்கையால் வைரஸ் தொற்று வேகமெடுத்தால் மீண்டும் பாடசாலைகளை மூடவேண்டிய நிலைமையே ஏற்படும்.” – எனவும் விசேட வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles