3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – மன விரக்தியில் தந்தை தற்கொலை! களுத்துறையில் சோகம்!!

” மூன்று நாட்களாக உணவு சமைப்பதற்கு வீட்டில் எதுவுமே இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தேடி வருவதாக கூறி, கணவர் வீட்டிலிருந்து சென்றார். எனினும், அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து வீட்டிலிருந்து இரு கதிரைகளை விற்பனை செய்துவிட்டு, பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக்கொடுத்தேன்.”

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார், பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத கவலையில் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் நாகராஜா ரஞ்ஜனின் மனைவியான மாடசாமி மஞ்சுளா.

வெலிபென்ன சட்ட வைத்திய அதிகாரி நிஹால் ஜயநெத்தி முன்னிலையிலேயே இவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

களுத்துறை, வெலிபன்ன பகுதியியைச் சேர்ந்த 37 வயதான நாகராஜா ரஞ்ஜன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

” எங்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன.
12 வயதுக்கு குறைவான 4 பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்களும், ஒரு மகளும் எனக்கு உள்ளனர். நாங்கள் தெமுவத்த மற்றும் நெபட ஆகிய பகுதிகளிலிருந்து 9 மாதங்களுக்கு முன்னர் தொழில் தேடி, வெலிபென்ன பகுதிக்கு வருகைத் தந்தோம்.

கணவருக்கு நிரந்தர தொழில் இருக்கவில்லை . கூலித் தொழில் செய்து, அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்க்கையை கொண்டு நடத்தினோம்.

3500 ரூபாவிற்கு வாடகைக்கு பெற்றுக்கொண்ட ஒரு அறையொன்றிலேயே வாழ்ந்து வந்தோம்.

நிரந்தர பதிவு இல்லாமையினால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பகூட முடியவில்லை.” – எனவும் மஞ்சுளா கண்ணீர் மலக குறிப்பிட்டுள்ளார்.

“எனது கணவர் வெலிபன்ன பகுதியிலுள்ள காணியொன்றை துப்பரவு செய்யும் குத்தகையை பெற்றுக்கொண்ட போது, அதற்கான பணம் உரிய வகையில் கிடைக்கவில்லை. அதன்பின்னர் கணவருக்கு எந்தவொரு தொழிலும் கிடைக்கவில்லை.

கடந்த மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமையினால், கணவர் மன வேதனையில் இருந்தார்.

பிள்ளைகளுக்கு ஏதாவது கொண்டு வருகின்றேன் என கூறி சென்றார். ஆனால், உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால், கணவர் தற்கொலை செய்துக்கொண்டார். தற்போது நானும், எனது பிள்ளைகளும் தனியாகி விட்டோம். பிள்ளைகள் சிறுவர்கள் என்பதனால், எனக்கு வேலைக்கு செல்ல முடியாது. எனது பிள்ளைகள் மேலும் நிர்க்கதியாகி விட்டார்கள்” எனவும் அவர் வரவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles