முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தலைமையிலான மலையக அரசியல் அரங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நாடு தழுவிய ரீதியில் கையொப்பம் திரட்டப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இன்று நுவரெலியா நகரிலும், ஹட்டனிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மல்லியப்பு சந்தியிலும் கையெழுத்து திரட்டப்படும், இந்நிகழ்வில் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என மலையக அரசியல் அரங்கம் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.
எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்களிப்புடன் ஹட்டனில் நடைபெற்ற கையெழுத்து வேட்டை மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பு எம்.பிக்கள், திலகர் அணியின் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்கு ஆதரவாக ஏற்கனவே சாணக்கியன் எம்.பி. கையொப்பமிட்டு ஆதரவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
