மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமை‌ப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதிலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுகின்றனர். இதன்போது ஏற்படும் கவனயீனம் காரணமாக உயிராபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் இரத்தின பலாபலாபத்தல ஊடாக ஓடும் க‌ளுகங்கையில் நீராடச் சென்று வெள்ளத்தில் சிக்கி 3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி சிவனொளிபாத மலை யாத்திரைக் காலத்தில் மட்டுமன்றி ஏனைய சூழ்நிலைகளிலும் இப்பிரதேச நீர்நிலைகளில் குளிக்கவும் உ‌ல்லாசமாகக் கழிக்கவும் வரும் பயணிகள் கவனயீனம் காரணமாக உயிராபத்துகளை எதிர்நோக்கியுள்ளதாக இவ்வமைப்பு சுட்டிக்காட்‌டுகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தினூடாக சிவனொளிபாத மலைக்குச் செல்லும் மூன்று வீதிகளிலும் களுகங்கை‌ வளவை கங்கையும் இவற்றின் கிளையாறுகளும் நீர்வீழ்ச்சிகளும் அதிகமாகக்காணப்படுகின்றன.

இப்பிரதேசத்திலும் மத்தி‌ய மலை நாட்டின் எல்லை பகுதிகளுக்கும் மழை பெய்வதால் நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்படுவதுண்டு.

இந்நிலைமையால் நீர்நிலைகளில் அடிக்கடி உயிராபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே நீர்நிலைகளை நாடி வருவோர் இவ்விடங்களில் உள்ள அறிவுறுத்தல்களை வாசித்து அவதானமாக செயற்பட்டால் உயிராபத்துக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம் எனவும் இவ்வமைப்பு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

Related Articles

Latest Articles