உக்ரைன் -ரஷ்ய மோதலில் வெல்லபோவது யார்? பொன்சேகா வெளியிட்ட தகவல்

” போர் அணுகுமுறையை மாற்றாமல், இராணுவத்துடன் நேருக்கு நேர் சண்டையிட்டதால்தான் பிரபாகரனுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது.” -என்று இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே, புலிகள் அமைப்பு குறித்தும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொன்சேகா கூறியவை வருமாறு,

” முன்பிருந்த சோவியத் ஒன்றியம்போல் ரஷ்யாவை கட்டியழுப்ப வேண்டும் என்ற கனவு புடினிடம் உள்ளது. அவர் ரஷ்யாவை பலப்படுத்திவருகின்றார். இந்நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவுக்கு விருப்பம் இல்லை. அது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ரஷ்யா கருதலாம்.

உக்ரைனைவிடவும் ரஷ்யா போர் வலிமை படைத்த நாடு. படைபலம், ஆயுதபலம் என எல்லாம் உள்ளன. எனவே, உக்ரைன் படையினர், நேரடியாக மோதினால் ரஷ்யப்படைகள் அவர்களை சின்னாப்பின்னமாக்கிவிடுவார்கள்.

இராணுவ பலம் குறைந்தவர்கள் கொரில்லா போர் உள்ளிட்ட தந்திரோபாயங்களையே கையாள்வார்கள். எனவே, உக்ரைன் தனது போர் அணுகுமுறையை மாற்றியமைத்தால் தாக்குபிடிக்கலாம். ஏனெனில் வியட்நாம் போரில் அமெரிக்காவால் வெற்றிபெறமுடியாமல்போனது. உக்ரைனின் போர் அணுகுமுறை மாற்றியமைத்தால், ரஷ்யா சில பகுதிகளை கைப்பற்றினாலும், அந்நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாமல்போகும்.

புலிகள் அமைப்பினர் போர் அணுகுமுறையை மாற்றாமல், இராணுவத்துடன் நேருக்கு நேர் சமரிட்டதால்தான், பிரபாகரனுக்கு அழிவை சந்திக்க நேரிட்டது. அவர்கள் சீருடையை களைந்து, மக்கள் மத்திக்கு சென்று – போர் அணுகுமுறையை மாற்றியிருந்தால் சற்று சவாலாக இருந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.

Related Articles

Latest Articles