இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய சில பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இ.தொ.காவின் தேசிய சபையில் 120 பேர்வரை அங்கம் வகிக்கின்றனர். வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவை பெற்றவர் தலைவராக நியமிக்கப்படுவார். தலைவர் பதவிக்கு பெரும்பாலும் இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்படலாம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டுவந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததையடுத்து, அவரின் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் கட்சிக்குள் சில அவசர மாற்றங்கள் இடம்பெற்றன.
அனுசியா சிவராஜா வசம் இருந்த பொதுச்செயலாளர் பதவி, ஜீவனிடம் கையளிக்கப்பட்டு, அனுசியாவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டது. தலைவர் பதவி என்பது வெற்றிடமாகவே வைக்கப்பட்டது. கட்சிக்குள் ஏற்படும் பிளவை தடுப்பதற்காகவே அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் உயிரிழந்தபோதுகூட, காங்கிரஸின் தலைவர் பதவிக்கு உடனடியாக நியமனம் இடம்பெறவில்லை. சில வருடங்களுக்கு பின்னரே வெற்றிடம் நிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே காங்கிரஸின் புதிய தலைவரை நியமிப்பதற்கான முக்கியத்தும்மிக்க தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடுகின்றது.