கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் இன்றிரவு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 50 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இதனை முன்னிட்டு கட்சி சார்பற்ற மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போதே அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என கோரி தொடர்ச்சியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து கோட்டாகோகம போராட்டக்களம் நோக்கிய பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.










