அகில இலங்கை பால் உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய தலைவராக பினேஷ் பனன்வல தெரிவு

அகில இலங்கை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AIDA) புதிய தலைவராக வட்டவளை பால் உற்பத்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பினேஷ் பனன்வல அதன் மூன்றாம் வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Richlife Dairy Private Limitedஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மற்றும் நான்கு ஆண்டுகளாக சங்கத்தின் நிறுவுனர் தலைவராகவும் இருந்த நிஷாந்த ஜயசூரியவின் வெற்றிடத்திற்கே பினேஷ் பனன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பனன்வல முன்பு சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள திரு. பனன்வல, மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் பயிற்சி உதவி அத்தியட்சகராக தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் அவர் கடந்த மூன்று தசாப்தங்களாக வட்டவளை பெருந்தோட்டத்தில் இணைந்து தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியாக தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தார். இவர் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தோட்ட சேவைகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். திரு. பனன்வல பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிர் அறிவியலில் MSc பட்டமும், மணிபால் பல்கலைக்கழகத்தில் (Sikkim) MBA பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள படைப்பாற்றல் தலைமைத்துவ மையத்தில் மேம்பட்ட முகாமைத்துவ பயிற்சியும் பெற்றவர் ஆவார்.

புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திரு. பனன்வல, குறிப்பாக சவாலான இந்த காலக்கட்டத்தில் பால் பண்ணைத் தொழிலின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். உறுப்பினர், துணை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறையில் கவனம் செலுத்துவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் AIDAஇன் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

“AIDAஎன்ற முறையில், உள்ளூர் பால் துறையின் முன்னேற்றம் குறித்த முற்போக்கான பொது-தனியார் உரையாடலைத் தொடர்கிறோம். புதிய விதிமுறைக்கு ஏற்ப, தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் மற்றும் வரம்புகளை எதிர்கொள்ள AIDA தொடர்ந்து அயராது உழைத்தது. வெபினார் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் கொள்கை அறிவைப் பகிர்வது தொடர்பான பரந்த அளவிலான செயல்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். தனியார் துறையுடன் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் மற்றும் பால் துறையின் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளில் அரசாங்கத்துடன் கொள்கை உரையாடலைப் பேணுவோம்.”என பினேஷ் பனன்வல தனது ஆரம்ப உரையின் போது தெரிவித்தார்.

Related Articles

Latest Articles