” எங்களின் உரிமைக்காக,விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்துவதற்கான அனுமதி வேண்டும். அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எமது போராட்டங்கள் தொடரும்.” – என்று தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானது, தேசத்துரோகமானது எனக்குறிப்பிட்டு அதற்கு எதிராக இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறித்த சட்டமூலமானது ஜனநாயகத்துக்கு சாவுமணி என்பதை நாமும் ஏற்கின்றோம்.
இவ்வாறு ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பும் எதிரணி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் அரசாங்கத்தின் செயலை ஆமோதிக்கின்றனர்.
அரசியலமைப்பின் 10 மற்றும் 14 ஆம் சரத்துகளின்பிரகாரம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், கூட்டாக செயற்படும் சுதந்திரம், கூட்டாக நினைவுகூரும் சுதந்திரம் ஆகியன இருக்கின்றன.
அப்படி இருந்தும் எங்களுடைய விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் மறுத்திருக்கின்றது. இதனை ஆமோதிக்கின்ற எதிர்க்கட்சியினர்தான் இங்கே ஜனநாயகத்துக்காக குரல் எழுப்புகின்றனர். அவர்களின் இந்த இரட்டை அணுகுமுறை கவலையளிக்கின்றது. இந்த தீவிலே தமிழர்களின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் ஜனநாயக சூழலை உருவாக்கிவிடமுடியாது என்பதை ஆணித்தரமாக குறிப்பிடுகின்றேன்.
குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 106 ஒன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கிலே எங்களுடைய விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரமுடியாது என்று நீதிமன்றமொன்று கட்டளையிட்டுள்ளது.
அதேபோல வவுனியா வடக்கு நெடுங்கேணியிலுள்ள ஆலயமொன்றில் திருவிழா நடத்துவதற்கு நிர்வாகம் முயன்றபோது அதற்கு தடைகோரி பொலிஸார் வலிந்துசென்று வழக்குதாக்கல் செய்தனர். எனினும், திருவிழாவை நடத்தமுடியும், அதனை தடைசெய்யமுடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவைமீறி, ஆலயத்தில் திருவிழா நடத்தவிடாமல் பொலிஸார் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். நெடுங்கேணி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்தான் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் எங்களுடைய நினைவேந்தல் விடயத்தில் நீதிமன்றம்கூறியதை அப்படியே கடைபிடித்து, வீட்டில் சாமிக்கு பூ வைத்து வழிபாடுகூட நடத்தமுடியாதவகையில் பொலிஸாரின் கெடுபிடிகள் உச்சஅளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தீலிபனுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தினால், உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பிலுள்ள எமது கட்சி உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இப்படியான நெருக்கடி நிலைமைதான் எமக்கு இருக்கின்றது.
எங்களைப்பொறுத்தவரை, எங்களுடைய உரிமைக்காக உயிர்நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்துவதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நினைவேந்தலுக்காக போராடிக்கொண்டிருப்போம்.” – என்றார்.










