ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
” ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய ஹட்டன் நகரத்தில் குவிந்துள்ள கழிவுகளை தற்காலிகமாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ரிக்காடன் கழிவு அகற்றப்படும் பிரதேசத்திற்கு கொண்டுச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பிரதான நகரமான ஹட்டன் நகரத்தில் திண்ம கழிவுகளை பிரித்து அகற்றுவதில் கடந்த சில தினங்களாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஹட்டன் நகரின் மத்தியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை தற்காலிகமாக உடன் அகற்றுவதற்றகான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு ஹட்டன் நகர குப்பைகளை அகற்ற பிறிதொரு இடம் வெகுவிரைவில் அடையாளம் காணப்பட்டு நகரசபைக்கு வழங்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
ஹட்டன் நகரில் குப்பைகள் குவிந்து கிடப்பது தொடர்பான செய்தியை ‘மலையக குருவி’ நேற்று பதிவிட்டிருந்தது. எமது செய்தியாளர் மஸ்கெலியா, பெருமாள் அது தொடர்பான தகவல்களை அனுப்பி வைத்திருந்தார்.










