புஸல்லாவையிலிருந்து பெரட்டாசிவரை செல்வதற்கு காலைவேளையில் பொது போக்குவரத்து (பஸ்) இன்மையால் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்துக்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கின்றது. இதனால் மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கவியை தொடர முடியாத அவல நிலையும் நீடிக்கின்றது.
காச்சாமலை, மேமலை, அயரி, பூச்சிக்கொடை , ரஸ்புரூக் ஆகிய தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு புஸல்லாவை உட்பட நகரப்பகுதிகளில் இருந்து ஆசியர்கள் பணிக்கு செல்கின்றனர்.
ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு பாடசாலை செல்ல வேண்டுமாயின், காலை 6.15 இற்காவது புஸல்லாவை நகரில் இருந்து பஸ்ஸொன்று புறப்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் தயார் என்ற போதிலும், உரிய வேளைக்கு பஸ்கள் இல்லை.
காலை 7 – 7.30 மணிக்கு பிறகே தனியார் பஸ்ஸொன்று புறப்படுகின்றது. அது ரஷ்புருக் சென்றடைவதற்கு காலை 9 மணியாகிவிடுகின்றது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் இரு இரு தரப்பினருமே பாதிக்கின்றனர்.
புஸல்லாவையிலிருந்து முன்னர் இபோச பஸ்ஸொன்று சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அந்த சேவை கடந்த பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு குரல் கொடுத்தும், சேவை மீள ஆரம்பமாகவில்லை.
தனியார் பஸ்களும், கொள் அளவை விடவும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றின்போதுகூட இருவர் பலியாகினர்.
சில ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதாக இருந்தால்கூட தற்போது எரிபொருள் பெறுவதில் நெருக்கடி நிலை காணப்படுகின்றது.
இது சாதாரண பிரச்சினை அல்ல, பல மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும். எனவே, காலைவேளையில் பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இபோச பஸ் சேவையில் ஈடுபட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










