” மாகாண முறைமை என்பது வலுவானதொரு அரசியல் கட்டமைப்பாக இருக்கின்றது. எனவே அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடாது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (24.09.2020) நடைபெற்ற நிதி ஆணைக்குழுவின் 2019 ஆம் ஆண்டுக்கான செயலாற்று அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளினதும் அவற்றின்கீழ்வரும் நிறுவனங்களினதும் செயற்பாடுகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான பரிந்தரையை மத்திய அரசாங்கத்துக்கு முன்வைக்கும் முக்கிய பொறுப்பை நிதி ஆணைக்குழு வகிக்கின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையானது இந்நாட்டில் பாராளுமன்றத்துக்கு அடுத்தப்படியாக வலுவான 2ஆம்நிலை அரசியல் கட்டமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்கின்றபோது அந்தந்த மாகாணங்களின் சனத்தொகை அளவு, தனிநபர் வருமானம், பொருளாதார நிலையில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வு, சமுகநிலை ஆகியன கருத்திற்கொள்ளப்படுகின்றன.
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலேயே மலையகத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்.இப்பகுதிகளில் இருக்கின்ற பெரும்பாலான தமிழ்ப்பாடசாலைகள் தோட்டப பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகள் தோட்ட வைத்தியசாலைகளாகவுமே இருக்கின்றன. வீதிகள்கூட மாகாண நிர்வாகத்துக்குட்பட்டதாகும்.
எனவே, உரியவகையில் நிதி உதவிகள் வழங்கப்படவேண்டும்.
அதேவேளை, மலையக உதவி ஆசிரியர்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான தகைமைகளைப்பூர்த்தி செய்தும் அவர்களுக்கான நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தேன்.
மத்திய அரசியிலிருந்து மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடு உரியவகையில் வழங்கப்படாமையும் நியமன தாமதத்துக்கான காரணமாக அமைந்துள்ளது.
எனவே,அவர்களுக்கான கொடுப்பனவுகளை, நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோல தோட்டப்பாடசாலைகள், வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளை தீர்ப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் மாகாணசபைகளுக்குவழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில் மாகாணசபை முறைமையை ஒழிப்போம் என சிலர் கோஷம் எழுப்புகின்றனர். மாகாணசபை முறை என்பது வலுவானதொரு கட்டமைப்பாகும்.அது நீடிக்கவேண்டும்.” – என்றார்.
