முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை அண்மித்த பகுதிகளிலே இவ்வாறான துணிகர கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
கடந்த 20.09.2022 அன்று புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலய வளாகத்தில் அமைந்த கடை ஆலய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உடைக்கப்பட்டு 75 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கடை உரிமையாளரினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 24.09.22 அன்று புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரப்பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து தாலிக்கொடி உள்ளிட்ட 20 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
காலை வேளை வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள புதுக்குடியிருப்பு சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று வந்து வீட்டினை பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு வீட்டினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஆறரைப்பவுண் தாலிக்கொடி மோதிரங்கள் 5 கைச்செயின் ஒன்று உள்ளிட்ட 20 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
