நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின் அருகில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் மாசு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு இப்பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்தினர். முற்றிலும் அகற்றப்பட்ட குப்பைகளை மீண்டும் அவ்விடத்தில் கொட்டுவதால் நானுஓயா பிரதான நகரம் அசுத்தப்படுவதாகவும், சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு,உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்.
நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாகவும் இது காணப்படுகின்றது. நானுஓயா நகரம் வரலாற்று ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நானுஓயா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களிலும்,வீடுகளிலும் சேகரிக்கப்படும் அழுகிய உணவுப்பொருட்கள்,மாமிசங்கள், எலும்புத்துண்டுகள்,எளிதில் உக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்கள் இவ்விடத்தில் கொட்டப்படுகின்றன.
இதனால் குப்பைகளுடன் மழை நீர் சேரும் போது சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. மொத்தத்தில் மண்,நீர் என்று மொத்தச் சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன .
இந்த நிலையில் அழகான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றங்களினால் மனம் நொந்து செல்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது .
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியோரம் நானுஓயா மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்திற்கு அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றமையால் நாய்கள், பறவைகள் அவற்றை நாலாபுறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதை, பிரதான பாதை அலங்கோலமாகக் காட்சி தருகின்றது, மற்றும் வாகன சாரதிகளும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமையால் அவை துர்நாற்றம் வீசுவது மாத்திரமன்றி, ஈக்களின் பெருக்கமும் ,நுளம்புகளின் பெருக்கமும் சமீப தினங்களாக அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் டெங்கு நோய்க்கு நிகராக, ஈக்களால் பரப்பப்படும் வாந்திபேதி, நெருப்புக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற வியாதிகளும் பரவும் அபாயம் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இரவு வேளைகளில் இந்த குப்பைகளை நாடி பன்றிகள் அதிகமாக வருகின்றமையினால் இப்பகுதியில் பயணிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் இந்தவிடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த 10 வருடத்திற்கு முன்னர் அந்த இடத்தில் தான் பிரதேச சபையால் குப்பைகள் போடப்பட்டன. அதற்கு பிறகு மாற்று இடங்கள் தருவதாக கூறினர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை இவ்விடத்தில் குப்பைகளை பிரித்து வேறுபடுத்தி அனுப்புவதற்காக நாங்கள் இவ்விடத்தை புனரமைப்பதற்கு முயற்சி செய்தோம்.எரிபொருள் தட்டுப்பாடு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் இயந்திர கோளாறு போன்ற காரணங்களினால் மகாத்மா காந்தியின் நினைவு மண்டபம் அருகில் குப்பை கொட்ட தொடங்கியுள்ளனர்.
சிறிது காலத்தில் எங்களுடைய வாகனத்தை பயன்படுத்தி மீண்டும் இவ்விடத்தை சுத்தம் செய்து தருவதாக கூறினார்.
எனவே குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










