பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது EPF, ETF பணத்தை பெறுவதில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். தொழில் துறையில் இருந்து ஓய்வு பெற்றும், மேற்படி கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு பல வருடங்கள் அலைந்து திரிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தமது ஓய்வு காலத்தில்கூட நிம்மதி இல்லை.
ஹட்டனில் உள்ள தொழில் காரியாலயம், நுவரெலியாவில் உள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகம் என்பவற்றுக்கு பயணம் செய்தே களைத்துபோய் விடுகின்றனர்.
இதற்கு பிரதான காரணம், தோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆவணங்களை முறையாக நிரப்புவதில்லை.
(சாதாரணதரம்கூட சித்தியடையாமல் அரசியல் செல்வாக்கால் பதவிக்கு வந்தவர்களால்தான் இந்நிலைமை) அதுமட்டுமல்ல தொழிலாளர்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதற்காகவும் இவ்வாறு வழுக்களை விட்டு, திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு தொடர்கின்றது.
ஆவணங்களில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்வதற்கு தோட்ட அலுவலகத்துக்கு செல்லும் தொழிலாளர்கள், நாளை வாருங்கள், ஒரு வாரம் கழித்து வாருங்கள், மூன்று மாதங்களுக்கு பிறகு வாருங்கள் என ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.










