நில உரிமை: நீலகாமம் எழுப்பும் நீதிக் குரல்!

மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் காணி உரிமை குறித்த விவாதங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் தோட்ட நிர்வாகத்திடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கைகள் இப்போது தீவிரம் அடைந்திருப்பதன் பின்னணியில் ஒரு கசப்பான சம்பவம் உள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், காவத்தை, நீலகாமம் முதலாம் பிரிவு தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் பதிவாகியிருந்தது. தோட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்ட சிலரே இவ்வாறு வீட்டைச் சேதப்படுத்தியுள்ளனர். தலைக்கவசம் அணிந்து வந்த அவர்கள், வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில், வீட்டை அமைத்த அந்தத் தொழிலாளி படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே மலையக மக்களின் காணி உரிமை குறித்த கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பேசுபொருளாகியுள்ளன. காணி உரிமையே தோட்ட நிர்வாகத்தின் அடாவடித்தனங்களில் இருந்து அந்த மக்களை விடுவிப்பதற்கான ஒரே வழியாகவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகவும் அமையும் என வலியுறுத்தப்படுகிறது. எனினும், பல தசாப்தங்களாக முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு எந்தவொரு அரசாங்கமும் இதுவரைத் தீர்வை முன்வைக்கவில்லை; தற்போதைய அரசாங்கமும் மௌனம் காக்கிறது.

இராணுவத்தை வெளியேற்று!

நீலகாமம் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் முன்னாள் இராணுவத்தினர் அல்லது விசேட அதிரடிப்படையினர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, மற்ற தோட்டங்களைப் போல தோட்டத் தொழிலாளர்களையே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

“இந்தத் தோட்டங்களில் இப்போது முன்னாள் இராணுவத்தினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வைத் தடுக்கவும் பாதுகாப்பிற்காகவும் இவர்களை வைத்துள்ளதாகத் தோட்ட நிர்வாகம் கூறுகிறது. ஆனால், தோட்டங்களுக்குள் நுழையும் இவர்கள் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும், தொழிலாளர்களை அச்சுறுத்துவதாகவும் புகார்கள் உள்ளன. அதன் உச்சக்கட்டமே நீலகாமம் சம்பவம். இவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்,” என்கிறார் ஊடகவியலாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான நிர்சன் இராமானுஜம்.

மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சிவம் பிரபாகரன் கூறுகையில், “தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை அகற்றிவிட்டு, மீண்டும் தொழிலாளர்களையே காவலாளிகளாக நியமிக்க வேண்டும். அங்கிருப்பவர்கள் அனைவரும் முன்னாள் இராணுவ வீரர்கள்; இது ஒரு வகையான இராணுவமயமாக்கல் அல்லவா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஒப்பந்தமே முதல் பிரச்சினை

பெருந்தோட்டங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் 1992-ல் செய்யப்பட்டது. ஒரு சிறு பகுதியைத் தன் வசம் வைத்துக்கொண்டு, ஏனைய ஒட்டுமொத்தக் காணிகளையும் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கியது. அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் வீடுகள் (லயன்கள்), ஏன் அவர்களின் வீட்டு வாசல் கூட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அங்கேயே பிரச்சினை வேர்விட்டது. பிரித்தானியர்கள் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி உழைப்பை உறிஞ்சிய அதே முறையைத் தற்போதைய நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. குடியிருப்புகளும் தங்கள் ஆளுகைக்குள் தான் உள்ளன என்ற இறுமாப்பில் அவர்கள் அடாவடித்தனம் செய்கின்றனர்.

சட்டத்தரணி விஜயகுமார் சுகுமாறன் இது குறித்துக் கூறுகையில், “அரசாங்கம் நினைத்தால் ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய முடியும். ஒட்டுமொத்தக் காணிகளும் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுத்து, மக்கள் வாழும் குடியிருப்புக் காணிகளை மட்டும் பிரித்தெடுக்கலாம். காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம், மக்கள் வாழும் நிலத்தை அரசு சுவீகரித்து அவர்களுக்கு வழங்க முடியும்,” எனத் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கிறார்.

1972 காணி மறுசீரமைப்புச் சட்டம்

1972-ஆம் ஆண்டின் 01-ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, பெருந்தோட்டக் காணிகளை அரசுடைமையாக்கும் போதே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “அப்போது இருந்த எமது தலைவர்கள் இந்த விடயத்தில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரினாலே நில உரிமையை உறுதிப்படுத்த முடியும்,” என்கிறார் சிவம் பிரபாகரன்.

மலையகத் தலைமைகளின் அச்சம்?

குடியிருப்பு காணிகளைப் பிரிக்கும்போது, எஞ்சிய பயிர்ச்செய்கைக் காணிகள் சிங்களப் பெரும்பான்மை மக்களின் கைக்குச் சென்றுவிடும் என்ற அச்சம் மலையகத் தலைமைகளிடம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் நிறுவனங்களின் கீழ் இருப்பது ஒரு பாதுகாப்பு எனத் தொழிற்சங்கங்கள் கருதின. ஆனால், சொந்த மக்களுக்கான நில உரிமையைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு சிந்திப்பது பிற்போக்கானது என விஜயகுமார் சாடுகிறார்.

அடித்தால்தான் எழுவோமா?

மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகம் மயில்வாகனம் திலகராஜ் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார்: “அடித்தால் மட்டும்தான் எழுவோம் என்ற நிலை மாற வேண்டும். எமது போராட்டங்கள் அனைத்தும் ஒரு சம்பவத்திற்குப் பிறகான எதிர்வினையாகவே உள்ளன. ஏன் நாம் முன்கூட்டியே திட்டமிட்டுப் போராடுவதில்லை? நிலவுரிமையை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் எங்கே? சமூக எழுச்சி என்பது நமது தேவைகளை முன்கூட்டியே அறிந்து போராடுவதாக இருக்க வேண்டும்.”

மலையக மக்களின் காணி உரிமை என்பது பல தசாப்த காலப் போராட்டம். அதனைச் செயல்படுத்தப் பல வழிகள் இருந்தும் ஆட்சியாளர்கள் மௌனம் காக்கிறார்கள். மலையகத் தலைமைகளும் வாக்கு அரசியலுக்காக இந்த அடிப்படை உரிமையைக் கோட்டைவிட்டுள்ளன. இனியும் காலம் தாழ்த்தாமல், அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்து போராடினால் மட்டுமே மலையகத் தமிழர்களின் நில உரிமையை வென்றெடுக்க முடியும்.

கட்டுரையாளர் – ச. பார்த்தீபன்

Related Articles

Latest Articles